2013ஐ நோக்கி

tna_indiaபொய்கள் வெளிச்சத்துக்கு வந்து விட்டன

இலங்கை அரசின் பல்வேறு பொய்கள் வெளிச்சத்துக்கு வந்துவிட்டன. ‘மக்களைக் கொல்வது நமது நோக்கமில்லை. மக்களைப் புலிகளிடம் இருந்து காப்பாற்றும் மீட்சி யுத்தத்தை நாம் செய்கிறோம்.” என்பது போன்ற பல்வேறு பொய்களைப் பரப்பிவந்த இலங்கை அரச இயந்திரத்தின் வேடிக்கைக் கதைகள் ஓய்ந்து வருகின்றன.

யுத்த முடிவின் பின் அனைத்து மக்களும் பயனடைவர் என்ற ஏமாற்றுக்கதைகளைச் சிங்கள மக்கள் நம்பியிருந்த காலமும் முடிவுக்கு வரத்தொடங்கிவிட்டது. மகிந்த ராஜபக்ச குடும்பச்சொத்து வளர்ச்சியடைகிறதே தவிர மக்களின் பொருளாதார நலன் வளர்ச்சியடையவில்லை என்பதை மக்கள் பார்க்கக்கூடியதாக இருக்கிறது. மகிந்த ஆட்சியைப் பிடித்த பிறகு அவரது குடும்பச் சொத்து 2 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. அவர்தம் வருமானம் வருசத்துக்கு 200 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமானது எனக் கருதப்படுகிறது.

இருப்பினும் மகிந்தவின் செல்வாக்கு முற்று முழுதாக குறைந்துவிட்டது என்று சொல்லிவிட முடியாது. மகிந்த குடும்பம் எறியும் எலும்புத்துண்டுகளைப் பொறுக்கித்தின்னும் வியாபாரக்கூட்டம் ஒன்று அவர்களைச் சுற்றி திரிகிறது. இலங்கைப் பொருளாதாரத்தை முற்றுமுழுதாகத் தமது குடும்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் மும்முரத்துடன் இயங்குகிறது மகிந்த குடும்பம். அவர்களுக்கு புகழ்பாடுவதால் லாபம் பெருக்கலாம் என்ற நோக்கத்தில் அலைகிறது ஒரு கூட்டம். இது தவிர யுத்தம் முடிவுக்கு வந்ததால் அனைவருக்கும் பயனுண்டு என்ற கருத்தும் பலரிடம் உண்டு. யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த ‘மன்னாதி மன்னன்” மகிந்த ராஜபக்ச என்ற சிங்கள பௌத்த இனவாத ஆதரவை அரச குடும்பம் தொடர்ந்து அனுபவித்துக்கொண்டுதான் இருக்கிறது. இது தவிர ஏதோ ஒரு விதத்தில் பொருளாதாரம் முன்னேறும் என்ற எதிர்பார்ப்பும் பலரிடம் உண்டு.

யுத்தத்தின் பின் உடனடிப்பொருளாதாரச் சரிவைத் தவிர்ப்பதற்காக ஜ.எம்.எப் தலையிட்டு 2.6 பில்லியன் டாலர்களை வழங்கி இலங்கை அரசின் சரிவைத் தடுத்து நிறுத்தியதை அறிவோம். இதன்பிறகு ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் லாபங்கள் அனைத்தும் அரச குடும்பத்தின் கையிலும் அவர்தம் ஒட்டுண்ணி வியாபாரிகளிடத்தும் முடங்குவதையும் அறிவோம். தவிர பொருளாதார வளர்ச்சி எல்லையற்றுத் தொடரும் என்பது அரசுசார் பொருளியலாளர்களின் வாதமாகவும் இருந்து வந்தது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் ஆழம் பற்றியும் அதனால் இலங்கை போன்ற சிறு அரசுகளின் பொருளாதாரம்கூட பாதிக்கப்படும் என்றும் கடந்த ஐந்து வருடங்களாகச் சொல்லிவருகிறோம். அப்படி ஒன்றும் நடக்காது. சீன- இந்தியப் பொருளாதாரங்களின் வளர்ச்சி ஆசிய சிறு பொருளாதாரங்களைக் காப்பாற்றும் என்ற கதையாடல் கனவாகிப் போய்விட்டது. முதலாளிகளின் தொடர்வளர்ச்சி கனவு உடைந்த ஆண்டாக 2012ம் ஆண்டு பதிவாகியுள்ளது.

உலகப் பொருளாதார நெருக்கடியின் பாதிப்பு

நாம் தற்போது வாழும் காலகட்டம் மிக ஆழமான உலகளாவிய பொருளாதார நெருக்கடிக் காலகட்டம். இது முதலாளித்துவத்தின் தற்காலிக நெருக்கடியல்ல. முதலாளித்துவப் பொருளாதாரத்தின் அடிப்படை முண்ரகளை வெளிக்காட்டும் ஆழமான நெருக்கடிக் கால கட்டம் இது. இந்த நெருக்கடியால் பாதிக்கப்படாத பொருளாதாரம் என்று ஒரு பொருளாதாரம் கிடையாது. உலகின் அனைத்து நாடுகளையும் இந்த நெருக்கடி தொட்டுத் துளைத்து நிற்கிறது. முதலாளித்துவ அமைப்புக்களின் -நிறுவனங்களின் போதாமையையும் இந்த நெருக்கடி பிளந்து காட்டியுள்ளது. முதலாளித்துவத்தின் மிகப் பெருமை வாய்ந்த திட்டப் பணியான ஐரோப்பிய ஒன்றியம் இன்று ஆடிப்போய் நிற்கிறது. கிரேக்க அரசு ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதும் அதன் தொடர்ச்சியாக ஒன்றியம் சரிவடைவதும் தவிர்க்க முடியாத நிகழ்வுகளாகக் கருதப்படுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பதற்றமான நிலை உலகப்பொருளாதார நெருக்கடியை மேலும் ஆழமாக்கும் என்பதில் ஜயமில்லை. இந்நிலையை மறைத்துத்தான் சீனத்து உதவியுடன் தாம் தொடர் வளர்ச்சியை அனுபவிக்க முடியும் என இலங்கையில் அரச ஊடகங்களும் நிறுவனங்களும் ஏமாற்றுக் கதை பரப்பி வந்தன.

சீன அரசின் பிராந்திய செல்வாக்கு

சீன அரசு ஏற்கனவே 6.9 பில்லியன் டாலர்களை இலங்கையில் முதலீடு செய்துள்ளது. இந்தத்தொகை அடுத்த மூன்று வருடத்தில் இரண்டுமடங்காகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இந்தச் சீனப் பணம் தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் நிகழ்வல்ல. தவிர இந்தக் கடனுக்கு வட்டி கட்டத் தொடங்கும் பொழுது வரும் வலியை, மக்களை ஏற்றுக்கொள்ளச் சொல்லி அரசு நிர்ப்பந்திக்கும் என்பதிலும் ஐயமில்லை.

சீன உதவி மகிந்தவின் குடும்ப அரசியலுடன் பின்னிப் பிணைந்த விவகாரம். மகிந்த முதல்தடவை தேர்தலில் வென்றபின் அவரது குடும்பம் பல கம்பனிகளை ஸ்தாபித்தது. சீனப் பணம் சார் முதலீடுகள் இக் கம்பனிகளுக்குள்ளாலேயே நிகழ்த்தப்படுகிறது. இதன் மூலம் சீன முதலீட்டினை மகிந்த குடும்பம் அனைத்து விதத்திலும் கட்டுப்படுத்துகின்றது. ஆக சீன அரசின் இலங்கை உறவு மகிந்த குடும்பத்துடனான உறவாக மருவி நிற்கிறது. சீன அரசு மகிந்தவைக் காப்பாற்றுவது அவர்கள் தமது நலனை இலங்கையில் காப்பாற்றுவதற்கு சம்பந்தப்பட்டது.

ஏற்கனவே ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் சீன அரசுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கும் போட்டிகள் வளர்வதை நாம் அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது. அமெரிக்க மற்றும் மேற்கத்தேய ஏகாதிபத்தியம் இந்திய அரசின் துணையுடன் பசுபிக் பிராந்தியத்தில் சீன அரசின் செல்வாக்கை மட்டுப்படுத்த முயற்சித்து வருவதை அவதானிக்கலாம். இதை எதிர் கொள்ள -சீன அரசு தனது பொருளாதார உறவைப் பலப்படுத்த- இராணுவ உதவியையும் சிறு நாடுகளுக்கு வழங்கி வருகிறது. மியன்மார் இலங்கை போன்ற நாடுகள் இந்த வலையில் இருந்து தப்ப முடியாதபடி அந்நாட்டுச் சர்வாதிகார குடும்பங்களை விலைக்கு வாங்குவதன் மூலம் அரச நடவடிக்கைகளை கட்டுப்படுத்தப்படுகிறது சீன அரசு.

கிழக்கு வாகரையில் சீன இராணுவம் இலங்கை இராணுவத்துடன் இணைந்து இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதும் பல்வேறு இராணுவ ரீதியான உதவிகளை வழங்குவதும் தெரிந்த விசயமே. வடக்கில் இராணுவ முகாம்களை உருவாக்கவும் அதில் விசேட வசதிகளை ஏற்படுத்தவும் அண்மையில் 100 மில்லியன் டாலர்களை சீன அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது. சீன அரசு இலங்கையரசுடனான தனது உறவை ‘எல்லையற்ற நட்பு” என வர்ணிக்கிறது. இந்த நட்பு மகிந்த குடும்பத்துக்கு அப்பாற் செல்லாத நட்பு.

மகிந்தவின் அரசுக்கு சவால்விடுவது சீன அரசின் பிராந்திய அபிலாசைகளை கேள்விக்குள்ளாக்கும் விசயம் என்று சொன்னோம். அதனால் சீனாவுக்கு எதிரான சக்திகள் பலப்படுவதால் மகிந்த அரசு மடியும் என்று இலகுபடுத்திய கணக்கு போடுவது தவறு. சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரணை வைத்து மகிந்தவுக்கு நெருக்கடியை உருவாக்கலாம் என சிலர் தவறாக நினைக்கிறார்கள்.

இந்திய முரண்நிலை

ஆசிய பிராந்தியத்தில் நாடுகளுக்கிடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது. உலகப் பொருளாதார நெருக்கடி மோசமாகுவது இந்த பதற்றத்தை வெளிப்படையான மோதல் நோக்கி நகர்த்திக் கொண்டிருப்பதையும் பார்க்கலாம். இலங்கையின் பூகோள முக்கியத்துவம் காரணத்தால் இப்பிராந்தியத்தில் வெளிப்படும் பல்வேறு முரண்கள் இலங்கைக்குள் தெறிபடும் -மோதி வெளிப்படும் என்பது தவிர்க்க முடியாததே. ஆனால் இந்த முரண்களை இலகுபடுத்திய முறையில் புரிந்துகொள்ளக்கூடாது.

ஆசியாவில் தனது செல்வாக்கை பரப்புவதுதான் இந்திய அரசின் நோக்கமும். இந்தியா சீனாவுடன் முரண் நிலையில் நிற்கிறது என்பதற்காக இந்திய அரசு ஒடுக்கப்படுவோர் சார்புநிலை எடுக்கும் என்று எதிர்பார்ப்பது முட்டாள்த்தனம். தமிழ்நாட்டில் டெசோ மாநாடு என்ற வாக்குவங்கி சார் கூத்தை கருணாநிதி குடும்பம் நடத்திக்கொண்டிருந்த அதே வேளை, ஒன்றுபட்ட இலங்கையின் இறையாண்மையைப் பேணுவது இந்திய அரசின் கடமை என்று டெல்கியில் மத்திய அமைச்சர் வி.நாரயண்சாமி ஊடகவியலாளர்களுக்கு அறிக்கை விட்டதை அறிவோம்.

மகிந்த அரசை கட்டுப்படுத்துவது இந்திய அரசின் நோக்கமாக இருக்கிறது. அரசியற்-பாராளுமன்ற ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கை மூலமோ அல்லது ஏதோ ஒரு வகையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவருவது மேற்கத்தேய நலன் சார்ந்ததாக இருக்கிறது. மேற்கத்தேய அரசுகள் நலன்சார் பொருளாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும் அரசை உருவாக்குவது அவர்கள் நோக்கம். ஏற்கனவே இந்திய அரசு வடக்கு கிழக்கில் ஏராளமான முதலீடுகளைச் செய்து வருகிறது.

இலங்கையின் ஒற்றுமையைக் காக்கும் வீரனாகத் தன்னை வர்ணிக்கும் மகிந்த இலங்கையை பொருளாதார ரீதியாக கூறு கூறாக்கி விற்று வருகிறார். வெட்டி வெட்டி அனுபவிப்பதில் சீன இந்திய அரசுகள் மும்முரமாக இருக்கின்றன.

இது தவிர சீன- இந்திய பொருளாதார வளர்ச்சி உலகப் பொருளாதாரத்தை காப்பாற்றும் என்ற நப்பாசை மேற்கத்தேய பொருளியலாளர் சிலருக்கு இருப்பதை பற்றி கூறியிருந்தோம். சீனாவுக்கு மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்வது சார்ந்து மலேசியா போன்ற பொருளாதாரங்கள் இயங்குவதுபோல் – சீனத்து விலை குறைந்த பண்டங்களை கொள்வனவு செய்வது சார்ந்து வளர்ச்சிக் கனவை மேற்கத்தேய நாடுகளும் கண்டுவந்தன. தவிர சீனத்துப் பெருஞ் சந்தையும் மேற்கத்தைய முதலாளிகளின் கண்ணை உறுத்தும் விசயங்களில் ஒன்றாக இருக்கிறது. சீனப் பொருளாதார சரிவு உலகப் பொருளாதாரத்தை நிச்சயமாகப் பாதிக்கும் ஒன்றாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. தவிர, சீனச் சரிவு சீனாவுக்குள்ளும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புண்டு. இந்த கொந்தளிப்பு ஆசிய பிராந்தியத்தில் பரவுமானால் அதில் ஒட்டுமொத்த முதலாளித்துவ நாடுகளுக்கும் நட்டம் ஏற்படும். அவர்களின் இருத்தல் கேள்விக்குள்ளாகும்.

இதனாற்தான் சீன – அமெரிக்க முரண்நிலை சிக்கலான பரிமாணங்களைக் கொண்டதாக இருக்கிறது. சீனா ,இந்தியா ஆகிய நாடுகள் வழங்கும் அரிய சந்தர்ப்பங்களை பாவிக்கத் தவறுகிறது இலங்கை அரசு என ஐ.எம்.எப் முதலான மேற்கத்தேய முதலாளித்துவ அமைப்புகள் தூண்டி வரும் நடவடிக்கையையும் இப்பின்னணியிலேயே புரிந்துகொள்ள வேண்டும். 60 வீதத்துக்கும் மேற்பட்ட இலங்கையின் ஏற்றுமதி அமெரிக்க – ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதியாகவே இருந்து வருகிறது. ஒன்றியத்தின் சரிவு இலங்கைப் பொருளாதாரத்தைச் சரிப்பதைத் தவிர்க்க முடியாது என்று சொல்வதற்கு இதுவும் ஒரு காரணம்.

நெருக்கடியில் இருந்து தப்ப வழி இல்லை

பொருளாதார நெருக்கடியில் இருந்து தப்ப ஒரு பொருளாதாரத்துக்கும் தெளிவான திறந்த வழி இல்லை. அனைத்துப் பொருளாதாரங்களும் நெருக்கடி சிக்கலில் பின்னிப் பிணைந்து ஆழமான தாக்கத்தை எதிர்கொண்டு நிற்கின்றன. இதனாற்தான் மேற்கில் மக்கள் சேவைகளை வெட்டுதல் – சம்பளத்தைக் குறைத்தல் – ஓய்வூதியத்தைக் குறைத்தல் – ஓய்வுக்கான வயசைக் கூட்டுதல் – என்று மக்கள் காலம் காலமாக போராடி வென்ற உரிமைகள் சூறையாடப்படுகின்றன. இவ்வாறு மக்கள் சேவைகளை வெட்டுவதால் நெருக்கடியில் இருந்து தப்பலாம் என்பது முதலாளித்துவத்தின் பிரச்சாரமாக உலகெங்கும் பரிணமிப்பதை நாம் பார்க்கலாம்.

ஓருபக்கம் ரில்லியன் டாலர்கள் கணக்கில் மூலதனத்தை முடக்கி வைத்திருக்கிறது முதலாளித்துவம். அவற்றை கொள்ளை லாபம் கிடைக்க முதலீடு செய்ய வசதியற்றதால் அவர்கள் முடக்கி வைத்திருக்கிறார்கள். மறுபக்கம் தமது லாபம் குறைவதை நிவர்த்திசெய்ய மக்கள் சேவைகளை வெட்டிக்கொத்தி சூறையாடுகிறார்கள். இன்னொரு பக்கம் அவர்தம் பங்குச் சந்தை சூதாட்டம் ஏராளமான செல்வங்களை அழித்தொழித்து வருகிறது. இதற்கு உடந்தையாக அரசும் அரசு சார் ஊடகங்களும் பிரச்சாரங்களைப் பரப்பி வருகின்றன. எமது வாழ்க்கைத் தரம் குறைக்கப்படுவது எமது நலனுக்குத்தான் என்ற பச்சைப் பொய் பிரச்சாரத்தை அவர்கள் செய்கிறார்கள். எதிர்ப்பைக் குலைக்க இராணுவ நடவடிக்கைகள் அதிகரிக்கப்படுகிறது.

2013ம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் ஏறத்தாழ 2.2 பில்லியன் டாலர்களை பாதுகாப்புச் சேவைக்காக ஒதுக்கியுள்ளது இலங்கை அரசு. இலங்கை வரலாறு காணாத அதிகூடிய தொகை ஒதுக்குதல் இது. யுத்தத்தின் உச்சிக்கட்டத்தில்கூட இவ்வளவு தொகை ஒதுக்கப்பட்டிருக்கவில்லை. கடந்த ஆண்டு பட்ஜெட்டில் இருந்து இது 26 வீத அதிகரிப்பு. அதே சமயம் கல்விச் சேவைக்கான ஒதுக்கீடு வரலாறு காணாத அளவு குறைக்கப்பட்டுள்ளது. உலகில் கல்விக்கு குறைந்தளவு செலவிடும் நாடுகளில் ஒன்றாக மாறியிருக்கிறது இலங்கை. இந்நிலையிற்தான் கல்விக்காக 6 வீத பண ஒதுக்கீட்டுக் கோரிக்கை பல்கலைக்கழக ஆசிரியர்கள் மத்தியில் வளர்ந்து வருகிறது. இந்தக் கோரிக்கையை மகிந்த அரசு நிராகரித்துள்ளது. மகிந்த அரசுக்கு முறையான எதிர்ப்பு முளைக்கும் முக்கிய புள்ளி இது.

அளவுகணக்கற்ற பணத்தை இராணுவ நடவடிக்கைக்கு ஒதுக்காமல் இந்த அரசு தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாது. ஊடகம் – நீதித்துறை – பொருளாதாரம் என்று அனைத்துத்துறைகளையும் தன் கையில் எடுக்காமல் மகிந்த தன் ஆட்சியை நீட்சி செய்ய முடியாது. அதனால் இத்துறைகள் சுயமாக இயங்கவேண்டும் என்று முயற்சிக்கும் அனைவரும் மகிந்தவுக்கு எதிராக திரும்பும் நிலை தோன்றியுள்ளது. இவர்களிற் பலர் மகிந்த அரசின் முன்னால் நண்பர்கள் என்பதையும் நாம் மறந்துவிட முடியாது. தலைமை நீதிபதியை விலத்தும் விவகாரமும் இது சம்மந்தப்பட்டதே.

பாகிஸ்தானில் எவ்வாறு இராணுவ ஆட்சி முக்கிய இடத்தைப் பிடித்ததோ அது போன்ற நிலையை நோக்கியே இலங்கை அரசம் நகர்ந்து கொண்டிருக்கிறது. பாடசாலைத் தலைமை ஆசிரியர்களுக்கு இராணுவ அந்தஸ்து வழங்குவதும் – அனைத்து துறைகளிலும் இராணுவத்தை புகுத்தும் நடவடிக்கையையும் நாம் பார்க்கிறோம்.

இந்நிலையிற்தான் இவ்வரசுக்கு ஒரு எதிரி தேவைப்படுகிறது ஏதாவது ஒரு வழியிற் பயம்காட்டி ஆதரவை திரட்டுவதே இதன் நோக்கம்.

சிங்கள இனவாதம் இன்றி அதிகாரத்தைத் தக்க வைத்தல் சாத்தியமா?

தமிழர்களைப் பற்றி பயம்காட்டி சிங்கள இனவாதத்தைத் தூண்டுவதன் மூலம் அதிகாரத்தை நிலை நாட்டுதல் நிகழ்வது இலங்கை அதிகார வர்க்கத்திற்குப் புதிய வரலாறில்லை. சுதந்திரத்துக்குப் பின்பு மலையக மக்களின் குடியுரிமையைப் பறித்ததில் இருந்து தொடர்கிறது இக்கதை. ஏதாவது ஒரு விதத்தில் தொழிற்சங்க – தொழிலாளர் நடவடிக்கைகள் அதிகரிக்கும்பொழுது – அதாவது சுரண்டப்படும் வர்க்கத்தின் அமைப்பு ரீதியான எதிர்ப்பு கிளம்பும்பொழுது – அதை முடக்க இனவாததத்தை அரசு கையில் எடுப்பதை வரலாறெங்கும் நாம் அவதானிக்கலாம்.

1953ம் ஆண்டு மாபெரும் பொது வேலைநிறுத்தம் அரசுக்கு பெரும் சவாலை உருவாக்கியது. உடனடியாக அதை உடைக்க இனவாதத்தைக் கையிலெடுத்தன வலதுசாரியக் கட்சிகள். அதன் தொடர்ச்சியாக மூன்று வருடங்களில் 1956ல் இனவாதக் காடையர் தமிழர்களைத் தாக்கினர். இதேபோல் 1980ம் ஆண்டு பொது வேலை நிறுத்தம் ஜே.ஆர் ஜெயவர்த்தனவால் மிகக் கொடூரமாக நொருக்கப்பட்டதை தொடர்ந்து இனவாதம் புதிய கட்டத்திற்கு உயர்ந்தது. அதைத் தொடர்ந்து மூன்று வருடங்களில் இனவாத காடையர் கூட்டம் 1983 படுகொலையை நிறைவேற்றியது. இந்த வரலாறு இன்றும் தொடர்கிறது.

தற்போது தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள், இடதுசாரிக் கட்சிகள், சிவில் சமூகத்தினர் என பல்வேறு பக்கங்களில் இருந்து எதிர்ப்பு வளரத்தொடங்கியுள்ளது. அதைத்தொடர்ந்து இனவாதத்தை மேலும் கொடூர உயரத்துக்கு நகர்த்தவேண்டிய தேவை ஆளும் வர்க்கத்திற்கு எழுந்துள்ளது. இனியும் இனவாதம் வளர இடமுண்டா என பலரும் ஆச்சரியமாகக் கேட்கலாம். இனவாதத்தின் மேலதிக கோர ஆட்டத்தை நிறைவேற்ற வல்ல அனைத்துப் பண்புகளையும் கொண்ட சர்வாதிகார அரசு தற்போதய இலங்கை அரசு என்பதை நாம் மறந்துவிடலாகாது.

இலங்கையில் தமிழர் பெரும்பான்மை என்ற பிராந்தியம் இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் இயங்கத்தொடங்கியிருக்கிறது தற்போதய அரசு. இதைச் சாதிப்பதானால் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் சிங்களப் பெரும்பான்மையை உருவாக்கவேண்டும். இதன் முதற்கட்டமாக இராணுவம் சார் குடும்பங்களை கிழக்கில் குடியேற்றத் தொடங்கியுள்ளது அரசு. இந்நடவடிக்கையை விரைவில் வடக்கு நோக்கி நகர்த்துவதும் -வடக்கு கிழக்கை நிரந்தரமாக பிரிப்பதற்காக மிகப்பெரும் இராணுவ முகாமை நிறுவுவதும் அவர்களின் திட்டங்களில் ஒன்றாக இருக்கிறது. இன அழிப்பு என்பதை எப்படி திட்டமிடலாம் என்பதற்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது இவ்வரசு.

இன்று எத்தகைய அரசியற் தீர்வுக்கும் இடமில்லை.13ம் திருத்தச் சட்டத்தை இல்லாமற் செய்வதற்கு அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் இதையே பகிரங்கப்படுத்துகிறது. அதே சமயம் இது இனவாதத்தை மேலும் தூண்டி எதிர்ப்புகளை முடக்குவதற்கும் அவர்களுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கிறது. தமது இருத்தலைப் பேணிக்கொள்ள இது அவர்களுக்கு அவசியமானதாக இருக்கிறது.

தமிழ்த் தலைமைகள்

இத்தகைய ஒரு கோரக் கட்டத்தில் நிற்கும் மக்களின் நலன்களைப் பேச- பாதுகாக்க இன்று இலங்கையில் எந்த பெரும் கட்சிகளும் தயாராக இல்லை. தமிழர்களுக்காக குரல்கொடுக்கிறோம் என்று சொல்லிக்கொண்டும் தாம் ‘தமிழ்க் கட்சி” என்று பாவனை செய்துகொண்டும் வரும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் எதிர்ப்பைக் கட்டும் எந்த நோக்கமும் இல்லை.

இராணுவம் வெளியேற வேண்டும் என்பதல்ல தமிழ் மக்களின் கோரிக்கை. தமிழர்களின் சம உரிமையைப் பாதுகாக்கும் வேலையை இராணுவம் செய்யவேண்டும் என்ற அர்த்தத்தில் அண்மையில் கூட்டமைப்பின் தலைவர் சம்மந்தன் பாராளுமன்றத்தில் பேசியிருந்தததை அறிவோம்.

கூட்டமைப்பைத் தவிர தமிழ்பேசும் மக்களுக்கு வாக்களிக்க வேறு வழியில்லை என்ற காரணத்தால் மட்டும்தான் கூட்டமைப்பு தேர்தலில் வெற்றி பெறுகிறது. வாக்களிப்பதால் மக்கள் அவர்கள் கொள்கைகளை அங்கீகரிக்கிறார்கள் என்று கருதுவது தவறு. ஒடுக்குமுறைக்கெதிராக குரல்கொடுக்கும் போராட்ட அரசியலை முன்வைக்கும் அமைப்பு இன்று ஈழத்திற் கிடையாது. அப்படி ஒரு சக்தி உருவாகத் தொடங்கினால் அதை அரசும் வலதுசாரிய அரசியல்வாதிகளும் அடித்து நொருக்கி அது முளைவிட முதலே கிள்ளி எறிய அந்தரப்படுவார்கள் என்பதும் தெரிந்ததே. ஒன்றுமே செய்யாத கூட்டமைப்புக்கூட கூட்டங்கள் போட முடியாத நிலையிற்தான் இருக்கிறது. அமைதியான ஒரு ஊர்வலத்தை நடத்த முயன்ற யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் அடித்து நொருக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை அறிவோம்.

இருப்பினும் ஒடுக்குமுறைக்கு எதிராகக் குரல்கொடுக்க ஒரு சக்தியும் முன்வராத வெற்றிடத்தில் தன்னிச்சையான போராட்டங்கள் வெடிப்பதும் புதிய அரசியல் அமைப்புக்கள் உருவாவதற்கான நடவடிக்கைகள் தோன்றுவதும் தவிர்க்க முடியாததே. கூட்டமைப்பின் தலைமையின் வங்குறோத்துத் தனத்தால் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகள் வலுப்பட்டுக் கொண்டிருப்பதையும் நாம் அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. கூட்டமைப்புக்குள் இருக்கும் பிளவு இந்த ஆண்டு மேலும் பலப்பட்டு பிரிவுநோக்கி நகரும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

வடக்கு கிழக்கில் இருக்கும் சிவில் சமூகத்தினர், மாணவர்கள், இளையோர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கவாதிகள், இடதுசாரிகள் இணைந்து ஒடுக்குமுறைக்கெதிரான போராட்டச் சக்தி ஒன்றை கட்டியமைக்க முன்வரவேண்டும். கூட்டமைப்புக்குள் இக்கருத்தை முன்வைப்பவர்கள் தாமும் இணைந்து ஒரு புதிய சக்தியைக் கட்ட முன்வரவேண்டும். இத்தகைய முயற்சி நடக்காத வரை தமிழ் பேசும் மக்களின் குரல் ஒரு முடக்கப்பட்ட குரலாகவே இருக்கும். இலங்கை பாரளுமன்றத்தில் சம்மந்தனின் முக்கல் முனகல் போன்றே அது வெளிவரும்.

தெற்கில் அரசு வரலாறு காணாத அளவு அதிக பணத்தைப் பாதுகாப்பு நிதிக்காக – இராணுவத்துக்காக ஒதுக்கியிருக்கிறது. இந்த பட்ஜெட் அறிக்கை வந்த இதே காலப்பகுதியில் இராணுவத்துக்கு ஆதரவாகப் பேசும் முட்டாள்தனமான தமிழ்த் தலைமைகளை அம்பலப்படுத்தவேண்டியது அவசியம். இந்தக் கேவலமான பட்ஜெட்டுக்கு எதிராக எவ்வாறு ஒன்று திரள்வது என்று தெற்கில் சில முற்போக்கு சக்திகள் முயற்சிக்கும் அதே தருணத்தில் அந்த முற்போக்கு சக்திகளை உள்வாங்கி பலத்தை திரட்டுவதற்குப் பதிலாக கேவலமான வலதுசாரிய அரசியலை முன்வைக்கிறது கூட்டமைப்புத் தலைமை. இந்தியப் பூச்சாண்டி காட்டி தமிழர்களை ஒடுக்க முனைப்போடு அரசு நிற்க இந்திய அரசை தமிழர்களை காக்கும் கடவுளாக சித்தரிக்க முயல்கிறது கூட்டமைப்புத் தலைமை. இந்த மோசமான பிற்போக்குத் தனத்தை உடைத்தெறிவது தமிழர்களின் போராட்டத்தைக் கட்ட முயல்பவர்களின் முக்கிய தேவைகளில் ஒன்றாக இருக்கிறது. தெற்கில் வெடிக்கும் எதிர்ப்புகள் தமிழ் பேசும் மக்களின் உரிமைக் கோரிக்கைகளையும் மதிக்கவேண்டும் என்று நாம் எதிர்பார்ப்பதானால் நாம் ஒரு புதிய புரட்சிகர சக்தியை கட்டித்தான் ஆகவேண்டும்.

இவர்கள் தெற்கில் ஆதரவை விரட்டியடிக்கும் வேலை செய்வதுபோல் தமிழ் நாட்டில் வாழும் மக்கள் இந்திய அரசால் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைகளையும் புறந்தள்ளி வைத்து இயங்குகிறார்கள். ஈழ மக்களின் படுகொலைக்கு எதிராக குரல்கொடுக்கும் தமிழக மக்களை இந்திய வலதுசாரிய ஆழும் கட்சிகளின் பிடிக்குள் நசுக்கும் செயற்பாடு இது.

தெற்கின் முற்போக்குச் சக்திகள்

கல்வித்துறையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிராகவும் -கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் ஒதுக்கப்படும் தொகை மிகவும் குறைக்கப்பட்டிருப்பதற்கு எதிராகவும் கல்வித்துறை சார்ந்தவர்களின் மற்றும் தொழிற்சங்கங்களின் எதிர்ப்பு பலப்படுவதை நாம் அவதானிக்கலாம். இது ஒரு முக்கியமான நிகழ்வு. இதுபோன்ற எதிர்ப்பே தற்போதய சர்வாதிகார அரசை முடிவுக்கு கொண்டுவரவல்லது.

தெற்கின் ‘முற்போக்கு சக்திகள்” என்று இத்தகைய போராட்டங்களை வைக்கும் சக்திகளையே நாம் குறிப்பிடுகிறோம். சனநாயக மறுப்பு அரசை முடிவுக்கு கொண்டுவருவது, பொருளாதார மாற்றை முன்வைப்பது, தமிழ்பேசும் மக்களின் தேசிய உரிமைகளை அங்கீகரிப்பது முதலான அடிப்படைகளில் உறுதியாக இருக்கும் முற்போக்குச் சக்திகள் திரள்வதும் அவர்கள் பலம் பெருகுவதும் அவசியம். இந்த அறிதலை மறுத்து அதற்கு நேரெதிரான முறையில் இனவாத கட்சிகளின் ஆசை காட்டல்களுக்கு இழுபடுவதுதான் இதுவரைகால தமிழ் அரசியற் தலைமைகளின் தொழிலாக இருந்து வந்திருக்கிறது.

தெற்கின் சில முற்போக்குசக்திகள்கூட முட்டாள்தனமான செயற்திட்டங்களை வைப்பதையும் நாம் அவதானிக்கலாம். ஜே.வி.பி யில் இருந்து உடைந்தபோதும் பழைய இனவாத தேசியவாத அரசியலில் இருந்து முற்றாக முறித்துக்கொள்ளாமல் தடுமாறுகிறது முன்னணி சோசலிச கட்சி. வலதுசாரிய ஐக்கிய தேசியக் கட்சிக்குள் மாற்றுக் கிடப்பதுபோல் அதற்குப்பின்னால் திரிவதை தொழிலாக கொண்டு இயங்கிவருகிறது விக்கிரமபாகுவின் நவ சம சமாஜ கட்சி. இதற்கும் அப்பால் சிதறிக்கிடக்கும் புத்திஜீவிகள் சிலர் இடைக்கிடை எழும்பி குழப்பமான கருத்துக்களை கக்கிவிட்டு வனவாசத்துக்குப் போய்விடுகின்றனர்.

முள்ளை முள்ளால்தான் எடுக்கவேண்டும் என்ற பாணியில் – இந்த இனவாத அரசை விழுத்த வேண்டும் என்றால் இன்னொரு இனவாதியால்தான் முடியும் என்று சில புத்திஜீவிகள் வாதிக்கின்றனர். ஒரு புத்த பிக்குவின் பின் திரள்வதன் மூலமே இந்த அரசுக்கு எதிர்ப்பைக் கட்டலாம் என அவர்கள் கனவை வளர்க்கிறார்கள். யுத்தத்தை நடத்திய ஜெனரல் பொன்சேகாவுக்கு பின்னால் திரளச் சொல்லி முன்பு வாதிட்டவர்களும் இவர்களே. பேய்க்குப் பதிலாக பிசாசைப் பிடிப்போம் என்ற கதையிது.

தேர்தலில் வாக்களிக்கச் செல்லும் மக்களுக்கு உண்மையான தேர்வுகள் வழங்கப்படுவதில்லை. ஒரு பேய்க்கு அல்லது இன்னொரு பிசாசுக்கு வாய்ப்பளிக்கும் வாய்ப்பே அவர்களுக்கு வழங்கப்படுகிறது. வேறு வழியின்றி பேயையோ பிசாசையோ அவர்கள் தெரிவு செய்கிறார்கள். பிசாசைத் தெரிவு செய்ததால் இரத்தக் காட்டேறி பிசாசுகள் தமது இரத்தம் குடிப்பதற்கு மக்கள் சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்று அர்த்தம் கொள்வது பிழை. பேயை வைத்து பிசாசை விழுத்தும் கதைக்குப் பின்னால் முன்னேற்றமற்ற முற்போக்கு வாதிகளும் இழுபடுகிறார்கள். சிங்கள பேரினவாதத்தை உடைக்க இன்னுமொரு பேரினவாதியின் காலில் விழ வேண்டும் என்று பேசுவது மடத்தனம். அதுவும் எதிர்புக்கான அறிகுறிகள் தோன்றியுள்ள வேளையில் இதைக் கதைப்பது இன்னும் கேவலமானது. இத்தகைய முட்டாள்தனத்தால்தான் மக்கள் மத்தியில் இவர்கள் கதை எடுபடுவது குறைந்து வருகிறது.

ஐக்கிய தேசியக் கட்சி

ஐ.தே.க ஒரு மாற்றைக் கட்ட வக்கற்றது என்பது மட்டுமல்ல – அது அரசுக்கு வலது சாரி எதிர்ப்பை வழங்கக்கூடிய சக்தியையும் இழந்து நிற்கிறது. அக்கட்சிக்குள் இருக்கும் முரண்பாடுகள் பிளவுகள் ஆளும் சுதந்திரக் கட்சியால் சரியான முறையில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சிங்கள முதலாளித்துவ சக்திகளை இனவாத அடிப்படையில் தமக்குப் பின்னால் திரட்டுவதில் பெரும் வெற்றியடைந்துள்ளது சுதந்திரக்கட்சி. இந்நிலையில் சிங்கள தேசியவாதத்தைப் பயன்படுத்தி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கவேண்டும் என்பதையே நோக்காக கொண்டு இயங்குகின்றனர் ஐ.தே. கட்சியின் பல முன்னணி உறுப்பினர்கள். மிகவும் பலவீனப்படுத்தப்பட்ட கட்சித்தவைராக இருக்கும் ரணில் விக்கிரமசிங்க வேறுவழியின்றி சில சமயங்களில் முற்போக்கு நாடகங்கள் போடவேண்டியவராக இருக்கிறார். இவர்களையும் இணைத்த ஒரு எதிர்ப்பு மேடையை கட்டுவதற்கு பல்வேறு முயற்சிகள் நிகழ்ந்தவண்ணம்தான் இருக்கிறது. ஆட்சியைப் பிடிக்கும் ஒரு டெக்னிக் என்பதைத் தவிர எதிர்ப்பை உருவாக்குவதற்கு அவர்கள் ஒரு சொட்டு முயற்சியும் செய்வதில்லை. அதற்காக அவர்களையும் இணைத்த மேடைகளுக்கான தேவை இல்லாமற் போய்விட்டது என்று குறுங்குழு முறையில் வாதிப்பதும் தவறு. ஐ.தே. கட்சியின் நாடகங்களை அம்பலப்படுத்தும் அதே வேளை இத்தகைய எதிர்ப்பு மேடைகளுக்கு உயிர்கொடுக்க வேண்டிய ஆக்கினைகளுக்கும் ஆட்படுத்தப்பட்டு நிற்கிறார்கள் முற்போக்குவாதிகள். இலங்கையில் உருவாகியுள்ள சிக்கலான அரசியல் நிலமையை இது சுட்டி நிற்கிறது.

தனது தலைமைப்பீடத்தை தக்கவைத்துக்கொள்வதே ரணிலின் தலையாய நோக்காக உள்ளது. ராஜபக்ச வழியைப் பின்பற்றி அல்லது பொன்சேகா போன்றவர்களை பிடித்துக்கொண்டுதான் ஆட்சியில் ஏறலாம் என்று ஒட்டுமொத்தக் கட்சியும் சரிந்து கொண்டிருக்கும் நிலமையில் தனது செல்வாக்கு கவிழ்ந்துவிடாமல் பாதுகாப்பதுதான் ரணிலின் போராட்டமாக இருக்கிறது.

ஐ.தே.க மிக மோசமான வலதுசாரிய பாரம்பரியமுடைய கட்சி. இனவாதத்தை தூண்டிய முக்கிய கட்சி. முற்போக்குச் சக்திகளின் முதுகெலும்பை உடைத்த கட்சி. இக்கட்சி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் செய்யக்கூடிய அகோரத்தை நினைத்து இவர்களுக்கு வாக்களிக்க மறுக்கும் ஏராளமான தொழிலாளர்கள் உண்டு. அந்நடவடிக்கை ராஜபக்ச ஆட்சி தொடர்வதை மறைமுகமாகவேனும் ஆதரிக்கும் நிலைக்கு அவர்களைத் தள்ளுகிறது. தற்போதய ஆட்சியை விழுத்தி அதிகாரத்தைக் கைப்பற்றக்கூடிய மக்களுக்கான மாற்றில்லாத இடைவெளியில், தற்போதய ஆட்சி விழுந்தால் அரசமைக்கப்போவது எக்கட்சி என்ற பலமான கேள்வி பலர் மனங்களில் உண்டு. பலவீனமான நிலையிலும்கூட ஐ.தே.க யைத் தவிர வேறு கட்சிகள் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையில் ராஜபக்சவின் பிசாசுத்தனத்தைத் தாங்கித்தான் ஆகவேண்டும் என்று சிந்திப்பாரும் உண்டு.

தற்போது உருவாகியிருக்கும் பொருளாதார நெருக்கடி நிலமையில் ஐ.தே.க ஆட்சிக்கு வந்தால் மோசமான முதலாளித்துவ கொள்கைகளை – தனியார்படுத்தல்களை அமுல்படுத்தும் என்பது உண்மையே. ஆனால் அதையேதான் தற்போதய அரசும் செய்துவருகிறது என்பதையும் நாம் மறந்துவிடலாகாது. தவிர இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பது சனநாயகச் சூழ்நிலையில் சாத்தியமா அல்லது சர்வாதிகார ஆட்சிக்குள் சாத்தியமா என்ற முக்கிய கேள்வியை நாம் இங்கு கேட்க வேண்டும். மக்களுக்கு அதிக உரிமைகள் கிடைப்பது – சனநாயக உரிமைகளின் அதிகரிப்பு – அவர்களின் வாழ்க்கைத்தர உயர்வு – அவர்களின் போராட்ட குணாம்சத்தை மந்தப்படுத்துவதல்ல. மாறாக போராட்டத்துக்கான – போராட்டத்தை கட்டுவதற்கான வாய்ப்புகள் அங்கு அதிகரிக்கிறது. இந்த அர்த்தத்தில் பேயோடு சேர்ந்தென்றாலும் ராஜபக்ச சர்வாதிகாரத்தை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்று சிலர் எண்ணுவதில் தவறில்லை. ராஜபக்ச குடும்பத்தின் முடிவு நிச்சயமாக சனநாயக கோரிக்கைகளை முன்வைக்கும் வாய்ப்பை அதிகரிக்கிறது என்பதை அனைத்து மக்களுக்கும் – முக்கியமாக சிங்களத் தொழிலாளர்களுக்கு நாம் அடித்துச் சொல்வது அவசியம்.

இது எமது வேலையில்லை என சில தமிழ் தலைமைகள் ஏமாற்றிப் பிழைக்கப் பார்க்கிறார்கள். அப்படி நினைப்பவர்கள் இலங்கைப் பாரளுமன்ற உறுப்பினருக்கான தேர்தலில் பங்குபற்றுவதை முதலில் நிறுத்த வேண்டும். இலங்கைப் பாரளுமன்றத்துக்காக இவர்களைத் தெரிவுசெய்து மக்கள் அனுப்ப அங்குபோய் சிங்கள இனவாத வலதுசரிய அரசியலுக்கு ஆதரவான நடவடிக்கைகளை இவர்கள் செய்கிறார்கள். இந்த தமிழ் தலைமை வரலாறு முடிவுக்கு வரவேண்டும். பாராளுமன்றம் செல்லும் இவர்கள் அதற்குள் இருக்கும் எதிர்ப்புச் சக்திகளுடன் இணைந்து எவ்வாறு ஒடுக்குமுறை அரசை முடிவுக்கு கொண்டுவரலாம் என்று சிந்திப்பதை விட்டுவிட்டு அதிகாரத்தைப் பலப்படுத்தும் வேலையை செய்வதை நாம் அம்பலப்படுத்தித்தான் ஆகவேண்டும்.

இந்நிலையில்தான் எதிர்ப்பைக் கட்டுவது பற்றிய அடிப்படையிலேயே மாறிய தீவிர முயற்சி பற்றி நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.

எதிர்ப்பைக் கட்டுதல்.

புதிய மாற்று அரசியல் அமைப்பை உருவாக்குதல் இன்றய காலத்தின் முக்கிய தேவைகளில் ஒன்றாக உள்ளது. இவ்வமைப்பு ஏற்கனவே இருந்த-இருக்கும் அரசியற் கட்சிகள் போல் பாராளுமன்றம் செல்வதைக் குறிக்கோளாக மட்டும் கொண்டு இயங்கும் அமைப்பாக இருத்தல் முடியாது. இவ்வமைப்பு போராட்டத்தை முன்வைக்கும் அமைப்பாக இருக்கவேண்டும். பொருளாதார-சமூக தளங்களில் மாற்றை வைக்கும் அமைப்பாகவும் ஒடுக்கப்படும் தேசியங்களின் சுயநிர்ணய உரிமை உட்பட அனைத்து மக்களின் மனித உரிமைகளையும் அங்கீகரித்து அதற்காக போராடும் அமைப்பாகவும் இருக்கவேண்டும். எவ்வகையிலும் ஒடுக்குமுறைகளுக்கு காரணமாக இருக்கும் அனைத்துச் சக்திகளையும் எதிர்க்கும் திறன் அதற்கு வேண்டும். இந்த அடிப்படையில் நாட்டுக்குள் மட்டுமின்றி சர்வதேசம் எங்கும் போராடும் சக்திகளை இவ்வமைப்பு திரட்டமுடியும்.

தமிழ்நாட்டு ஒடுக்கப்படும் மக்களை – அவர்கள் உரிமைகளை புறக்கணித்து ஈழத்தில் ஒரு அமைப்பு உருவாகுமானால் அது பலமற்ற அமைப்பாகவே உருவாகும். தமிழ்நாட்டு மக்களை ஒன்றிணைத்த ஒரு அரசியலமைப்பு ஈழத்தில் உருவாகுவது மிக முக்கியமான தேவை. இந்திய அரசுக்கு ஊதுகுழலாக இருக்கும் சம்மந்தன் போன்ற தமிழ் தலைமைகள் வழியில் இது உருவாக முடியாது. மாறாக தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்களை பெருமையோடும் நன்றியோடும் பார்க்கும் புலம்பெயர் மற்றும் ஈழத்து இளையோர் ஊடாகத்தான் இது உருவாக முடியும்.

அரசியற் கட்சி என்றதும் உடனடியாக மக்கள் மத்தியில் சந்தேகம் எழுவது தவிர்க்க முடியாததே. குறிப்பாக தமிழ்நாட்டில் தொடர்ந்து பல கட்சிகளாலும் அமைப்புகளாலும் ஏமாற்றப்பட்டுவரும் மக்கள் எந்தக் கட்சியையும் நம்பத்தயாராக இல்லை. மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்க புதிய அமைப்பு பல்வேறு விதிகளுக்கு அடங்கி இயங்குவது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. தேர்தலில் தேர்வு செய்யப்படுபவரின் பொருளாதார நிலவரம் மக்களுக்கு வெளிப்படையாக சொல்லப்படவேண்டும் – அவர்கள் சராசரி தொழிலாளரின் ஊதியத்தை விட அதிக ஊதியம் பெறக்கூடாது – தேர்வு செய்த மக்கள் நினைத்தால் அவர் பதவி விலகுதலுக்கான வழி ஏற்படுத்தப்படவேண்டும் – இது போன்ற வழிமுறைகள் நிச்சயமாகக் கடைப்பிடிக்கப்பட்டே ஆகவேண்டும். இம்முறையிற்தான் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற ஒரு அமைப்பு உருவாக முடியும்.

படுகொலையை நிகழ்த்தி வரலாற்றை முறித்த வலதுசாரிகளுக்கு இத்தகைய அமைப்பு உருவாவதுதான் சரியான பாடத்தைக் கற்பிக்க வல்லது. இந்த முயற்சியை முன்னெடுக்க இன்று எத்தனைபேர் தயாராக இருக்கிறோம் என்பதுதான் இன்றைய அடிப்படைக் கேள்வி. எத்தனைபேர் எமது வாழ்கையின் ஒரு பங்கையாவது இந்த வரலாற்றுக் கடமைக்கு அர்ப்பணிக்கத் தயாராக உள்ளோம்? சமூகம் சார்ந்த அறிவு – அதன் முரண்களைக் கூர்மையாக அவதானிக்கும் வல்லமை – போராட்டத்தை எதற்காகவும் விட்டுக்கொடுக்க தயாரற்ற உறுதி – என்ற அடிப்படைக் குணாம்சங்கள் உள்ள ஒருசொட்டுப்பேர் போதும் வரலாற்றை மாற்றியமைக்க. அத்தகைய சக்திகள் ஒன்றுசேர முன்வரவேண்டும்.