தமிழர்களின் வரலாற்றுக் கடமை

இந்தக் கட்டுரை மே 17 இயக்கத்தை சார்ந்தவரும் புதிய சோசலிச கட்சியின் நேற ளுழஉயைடளைவ யுடவநசயெவiஎந (ஊறுஐ-ஐனெயை) ஆதரவாளருமான ச.பாலாஜி யால் எழுதப்பட்டது. கூடன்குளம் அணுஉலை திட்டத்துக்கு எதிரான போராட்டம் பற்றிய பல பின்னனி விபரங்களை இக்கட்டுரை வழங்குகிறது.

socialism.in

தமிழர்களின் வரலாற்றுக் கடமை

தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் சிறிய ஊரான கூடங்குளம் இன்று உலகையே தன்வசம் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க அறப்போராட்டத்தின் வாயிலாக அணுமின் திட்டத்திற்கெதிரான தமது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டப்பந்தலில் வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். காவல் துறையினரும், பத்திரிக்கையாளர்களும், தொலைக்காட்சி கேமராக்களும் முழுநேரமும் வளையவருகின்றனர். தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும் தங்களது ஆதரவை நல்கி வருகின்றனர். ஆயினும் மத்திய அரசு இவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் எண்ணத்தில் இல்லை.

இது ஒருபுறமிருக்க தமிழகத்தின் பிற பகுதிகளில் இருக்கின்ற மேல்தட்டு வர்க்கம் இந்திய தேசத்தின் வளர்ச்சியே இந்த அணுஉலைக்குள் தான் அடங்கியிருக்கின்றது என்பதைப்போன்று பொய் பிரச்சாரம் செய்து வருகின்றது. இதில் சரியான புரிதல் இல்லாதவர்கள் “ஏன் திட்டம் தொடங்கப்பட்ட போது விட்டுவிட்டு இப்பொழுது போராடுகின்றீர்கள்?” என கேட்கிறார்கள். இந்த கட்டுறையின் நோக்கம் இந்த போராட்டத்தின் வரலாற்றையும், அணுஉலையின் பாதிப்புகளையும் விளக்குவதுதான்.

போராட்ட வரலாறு ::

கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்க, செர்னோபில் விபத்து நடந்து இரண்டு வருடங்கள் கழித்து 1988 ல் அன்றைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இரசிய பிரதமர் கார்பசேவும் இணைந்து ஒப்பந்தம் கையெழுத்திட்டனர். அன்றிலிருந்தே இந்த திட்டத்திற்கெதிரான போராட்டம் தமிழகத்திலும் கேரளத்திலும் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் தென் மாவட்டங்கள் முழுவதும் இந்த போராட்டம் விரிவடைந்தது. 1989 ல் கன்னியாகுமரியில் 10,000 பேர் கலந்து கொண்ட ஒரு மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியை தடுக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் குண்டடி பட்ட பலரும் இன்றும் போராடி வருகின்றனர். 1990 ல் சோவியத் ரசியா உடைந்த பிறகு இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. பின் 1997 ல் தேவகௌடா பிரதமராக வந்தபொழுது மீண்டும் இந்த திட்டத்தை கையிலெடுத்தார். மீண்டும் போராட்டங்கள் தலைதூக்க தொடங்கின. அன்றிலிருந்து போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன. ஒரு காலகட்டம் வரைக்கும் இந்த போராட்டமானது ஒருசில அணுசக்தி எதிர்ப்புக்குழுவினரால் மட்டும் நடத்தப்பட்டது பொதுமக்களின் ஆதரவு அவர்களுக்கு அவ்வளவு எளிதில் கிடைக்கவில்லை. இந்த அணுஉலை அமைந்தால் அவர்களில் பலருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும், கூடங்குளம் கிராமம் லண்டன், நியூயார்க் போல வளர்ந்துவிடும் என அரசு இவர்களை ஏமாற்றிவைத்திருந்ததை நம்பி இந்த போராட்டக்காரர்களை தங்களின் வேலைவாய்ப்பை பறிக்க வந்தவர்களைப் போன்று தான் பார்த்தார்கள். ஆனால் உலையின் கட்டிடப்பணிகள் தொடங்கிய பின்னர் அங்கு பணிபுரிய உள்ளுர் மக்களை வேலைக்கெடுக்காததைத் தெராடர்ந்து அரசின் உண்மை முகம் மக்களுக்கு புரியத் தொடங்கியது. மெல்ல போராட்டத்தில் தங்களையும் இணைத்துக்கொள்ள தொடங்கினர். எல்லாவற்றிற்கும் மேலாக புகுஷிமாவில் நடந்த அணுஉலை விபத்தை பார்த்த மக்களுக்கு கூடங்குளமும் ஒருநாள் இத்தகைய நிலை எய்த வேண்டி வரும் என்ற அச்சம் ஒட்டுமொத்த தென்தமிழக மக்களையும் ஒரணியில் நிற்க வைத்தது. கூடங்குளத்தில் அணுஉலை வேண்டாம் என ஒருகுரலில் உரக்க சொல்லி மத்திய அரசையும் தன்வசம் திரும்பிப்பார்க்க வைத்தனர்.

போராட்டத்தை ஒடுக்க அரசின் சூழ்ச்சி ::

வரலாறு காணாத இந்த ஒன்றிணைந்த மக்கள் போராட்டத்தை ஒடுக்க அரசு நேர்மையான வழிகளில் முடியாததால் சூழ்ச்சி செய்து ஒடுக்கப் பார்க்கின்றது. முதலில் இந்தப் போராட்டத்தை மீனவர்கள் மட்டும் நடத்தும் போராட்டம் என்றும் பின்பு கத்தோலிக்க பாதிரியார்களின் தூண்டுதலின் பேரில் நடக்கும் போராட்டம் என்றும் கொச்சப்படுத்தியது. போராடும் மக்களை சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் பிரிக்க சூழ்ச்சி செய்தது. இந்த சூழ்ச்சி அந்த மக்களிடம் எடுபடாததால் இந்த போராட்டம் வெளிநாட்டிலிருந்து தூண்டிவிடப்படுவதாகவும் அங்கிருந்து பெருமளவு பணம் கைமாறப்படுவதாகவும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. ஆனால் அவர்களது முயற்சிகள் எதுவும் இந்த மக்களிடம் எடுபடவில்லை. கூடங்குளம் அணுஉலையை மூடாமல் ஓயமாட்டோம் என சூளுரைத்து தொடர்ந்து போராடி வருகின்றனர். கூடங்குளத்தில் தொடங்கப்பட்ட இந்த போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவி வருகின்றது.

அணுஉலை அமைக்க கூடங்குளம் ஏற்ற இடமா ?

1988 ஆம் ஆண்டு முதன்முதலில் இரண்டு அணுஉலைகளை அமைக்க ரசியாவுடன் ஒப்பந்தம் போடப்பட்ட பொழுது அந்த அணுஉலைகளை அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட இடம் கூடங்குளமே அல்ல. முதலில் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைக்க முனைந்தபோது அதை கேரள அரசும் கேரள மக்களும் இணைந்து எதிர்த்ததால் அந்த இடம் கைவிடப்பட்டு பின்னர் கூடங்குளத்திற்கு மாற்றப்பட்டது. 2004 ஆம் வருடம் இந்தோனிசியாவில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் இந்தியாவின் கீழ்கடற்கரை முழுவதும் சுனாமியால் பாதிப்புக்குள்ளாகின. அப்பொழுது கூடங்குளம் பகுதியை சுனாமி தாக்கியது வேறெங்குமல்ல தற்பொழுது அணுஉலை அமைத்திருக்கும் அதே இடம் தான். பாதுகாப்பான சுற்றுச்சூழலுக்கான மருத்துவர் குழுவைச் சேர்ந்த மருத்துவர் இரமேசு அவர்கள் பல வருடங்களாக அங்கு ஆய்வு செய்ததின் பேரில் கூடங்குளத்திற்கு 90 கி.மீ தொலைவில் கடலுக்கடியில் மிகப்பெரிய வண்டல் குவியல் இருப்பதாகவும் அதனால் கடலுக்கடியில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் அந்த நிலச்சரிவினால் அப்பகுதியில் பூகம்பம் ஏற்படும் அபாயம் இருப்பாதாகவும் கண்டறிந்துள்ளார். மேலும் கூடங்குளத்திலிருந்து தெற்கு நோக்கி கடலுக்கடியில் உள்ள தரைப்பரப்பில் மிகப்பெரிய விரிசல் இருப்பதாகவும் இதனால் ஏற்கனவே பல முறை இந்த பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் ஆதாரத்துடன் நிரூபித்துள்ளார். கூடங்குளத்தை சுற்றியுள்ள கடற்பரப்புக்கடியில் எரிமலை பாறைகள் இருக்கின்றதெனவும், கூடங்குளத்தில் தற்பொழுது அமைந்திருக்கும் உலைகளுக்கு நேர் கீழே எரிமலையின் முகவாய் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு கூட ராதாபுரத்திற்கு தெற்கே உள்ள ஒரு ஊரில் மழை பெய்த பொழுது நிலத்தில் பெரிய பள்ளம் உருவாகி அது பெரிய கிணறு போன்று தோற்றம் அளித்ததாக மக்கள் தெரிவித்தனர். இதை ஆங்கிலத்தில் Karst எனக் கூறுவர். கூடங்குளம் நிலநடுக்க அளவீடான செய்ஸ்மிக் 4 அளவு இடத்தில் வருகின்றது.

ஒரு அணுஉலை அமைக்கும் முன்பு பின்பற்ற வேண்டிய எந்த ஒரு விதியையும் இந்திய அரசும் அணுசக்தித்துறையும் இங்கு பின்பற்றவில்லை. பன்னாட்டு அணுசக்தி ஒழுங்காற்று விதிகளின்படி ஒரு அணுஉலை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 5 கி.மீ சுற்றளவுக்கு உள்ள இடம் பாதுகாக்கப்பட்ட இடமாகும். அங்கு மக்கள் யாரும் வசிக்கக்கூடாது. ஆனால் இந்த அணுஉலையைச்சுற்றி கூடங்குளம், இடிந்தகரை உட்பட 3 கிராமங்கள் இருக்கின்றன, அங்கு மொத்தம் 40000 க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். மேலும் அணுஉலை அமைந்திருக்கும் இடத்தில் இருந்து 15 கி.மீ சுற்றளவுக்கு உள்ள இடத்தில் அதிகபட்சமாக 10000 மக்கள் தான் வசிக்க வேண்டும் ஆனால் இங்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அணுஉலையை சுற்றி 50 கி.மீ தூரத்திற்கு எந்தவொரு சுற்றுலாத்தலமும் இருக்கக்கூடாது. ஆனால் இங்கிருந்து 23 கி.மீ தூரத்தில் கன்னியாகுமரி உள்ளது. அணுஉலை அமைப்பதற்கு முன்பு அங்குள்ள மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும் ஆனால் அதுவும் இங்கு நடத்தப்படவில்லை. இந்த உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை மக்களிடம் பகிரப்படவில்லை. மேலும் இங்கு நடத்தப்பட்ட தல ஆய்வறிக்கையும் பாதுகாப்பு ஆய்வறிக்கையும் மக்களிடமோ ஊடகங்களிடமோ வெளியிட அணுசக்தித்துறை மறுத்து வருகின்றது. மேலும் இந்த உலை உலகின் வளமான கடல்வாழ் உயிரிகள் பகுதியான மன்னார் வளைகுடாவுக்கு மிக அருகில் இருப்பதனால், இவ்வுலையில் இருந்த வெளியேறும் சூடான நீரால் அங்குள்ள மீன்வளங்கள் பாதிக்கப்படும் அபாயமும் உள்ளது.

கூடங்குளத்தில் இருந்து 10 நாட்டிகல் மைல் தொலைவில் இலங்கை இருக்கின்றது. இங்கு ஏற்கனவே சீனா தனது ராணுவத்தளவாடங்களை அமைத்துவிட்டது. அங்கிருந்து தாக்குவதற்கு மிக எளிய பகுதியாக கூடங்குளம் இருக்கின்றது. ஆக இயற்கை அமைப்பில் பார்த்தாலும் அணுவிதிகளின்படி பார்த்தாலும் கூடங்குளம் அணுஉலை அமைப்பதற்கு ஏற்ற இடமே அல்ல என்பது தான் உண்மை.

அணுஉலை பாதுகாப்பானதா ?

ஒரு அணுஉலை சாதாரணமாக இயங்கிக் கொண்டிருக்கும் பொழுதே தொடர்ந்து அது கதிர்வீச்சு கனிமங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும். அணுப்பிளவு ஏற்படும் பொழுது உருவாகும் ஆற்றலிலிருந்து சீசியம், டெலூரியம், ஸ்ட்ரான்டியம் போன்ற 200 க்கும் மேற்பட்ட அபாயகரமான கதிர்வீச்சு கனிமங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கும். இதில் பல கனிமங்கள் பல்லாயிரம் வருடங்களுக்கு நீடித்து இருக்கக்கூடியவை. ஒரு 1000 MW திறன் உள்ள உலைக்குள் 1000 ஹிரோஷிமா குண்டுகளுக்கு சமமான அணுக்கதிர்வீச்சு இருக்கும். இந்த உண்மையை அரசாங்கமும் அணுசக்தி துறையும் மக்களிடமிருந்து மறைத்து வருகின்றது. மேலும் கூடங்குளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள VVER ரக உலைகளில் ஆபத்து நேரங்களில் அணு இயக்கத்தை நிறுத்தப் பயன்படுத்தப்படும் பாதுகாப்பு கம்பி இயக்கத்தில் குறைபாடு உள்ளது நன்கு தெரிந்த ஒன்று. இதனால் தான் செர்னோபில் விபத்து தடுக்க முடியாமல் போனது.

அணுக்கதிர்வீச்சினால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய், மலட்டுத்தன்மை, சிறுநீரக கோளாறுகள், மனவளர்ச்சி குறைபாடு போன்ற நோய்களுக்கு ஆளாவது மட்டுமன்றி அவர்களுக்கு பிறக்கின்ற குழந்தைகளும் உருச்சிதைவுடனும், இந்நோய்களையும் தாங்கி பிறக்கின்றனர். இது ஓரிரு தலைமுறைகளுக்கு மட்டும் தொடர்வதல்ல, பல்லாயிரம் வருடங்களுக்கு தொடரும்.

செர்னோபில் விபத்துக்கு பின் அதை சுற்றி ஒரு லட்சம் சதுர மைல் அளவு அணுக்கதிர்வீச்சு பாய்ந்துள்ளது. இது தமிழ்நாட்டை விட இரண்டு மடங்கு பெரியதாகும். 2004 ஆம் ஆண்டு வரை பத்து லட்சம் மக்கள் வரை இறந்துள்ளனர். இது இன்னும் பல வருடங்களுக்கு தொடரும். மேலும் 50 லட்சம் மக்கள் அணுக்கதிர்வீச்சினால் புற்றுநோய் போன்ற பல நோய்களுக்கு ஆளாகியுள்ளனர். அணுக்கதிர்வீச்சின் தாக்கம் உள்ள பகுதிகளில் 20 விழுக்காட்டிற்கும் குறைந்த அளவிளான குழந்தைகளை ஆரோக்கியமாக உள்ளனர்.

சப்பானில் நடந்த புகுசிமா விபத்து செர்னோபில் விபத்தை விட 40 மடங்கு பெரியது. இதன் முழுமையான பாதிப்பு வரும் காலங்களில் தான் தெரியவரும். இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு பெயர்ந்துள்ளனர். அவர்கள் யாரும் மீண்டும் அங்கு செல்லவே முடியாது. புகுசிமா உலையிலுருந்து கசியும் கதிர்வீச்சானது பசிபிக் பெருங்கடல் முழுவதும் கலந்து பரவிக்கொண்டிருக்கின்றது. ஐரோப்பிய விஞ்ஞானிகள் சிலரின் ஆய்வுப்படி புகுசிமா உலையை சுற்றி 200 கிமீ தொலைவில் 2 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் அடுத்த பத்து ஆண்டுகளில் புற்றுநோயால் பாதிக்கப்படுவர் என கணக்கிடப்பட்டுள்ளது.

பாடம் கற்றுக்கொள்ளாத இந்தியா ::

இதுவரை பல சிறுசிறு விபத்துகளும், மனித்தவறுகளும், இயந்திரக்கோளாறுகளும் இந்தியாவிலேயே நடந்துள்ளன. இதிலிருந்து இந்தியா எந்தவொரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை மாறாக அவற்றை மூடிமறைப்பதிலேதான் குறிக்கோளாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக
1. தாராபூரில் உள்ள இரண்டு கொதிநீர் உலைகளும் அமெரிக்காவின் 1969 வின்டேஜ் வடிவ உலைகளாகும். உலகத்திலுள்ள இதே வகையிலான அனைத்து உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டுவிட்டன. ஆனால் இவை இன்றும் பல கோளாறுகளுடன் தாராபூரில் இயங்கி வருகின்றது.
2. ராஜஸ்தானில் உள்ள 2 உலைகளும் (ராபஸ் 1-2 ) கனடியன் தொழில்நுட்ப உதவியுடன் கட்டப்பட்ட இரண்டு அழுத்தமூட்டப்பட்ட கனநீர் உலைகளாகும்(PHWR). முனைக்கவசம் விரிசலடைந்து பெருமளவு கசியத்தொடங்கியதும் ராப்ஸ் – 1 ன் திறன் 200 மெகாவாட்டிலிருந்து 100 மெகாவாட்டாக குறைக்கப்பட்டது. ராபஸ் 1-2 மற்றும் மாப்ஸ் 1-2 ஆகியவற்றில் உள்ள கவசங்களில் 3.5 விழுக்காடு நிக்கல் துருவுறா எஃகு பயன்படுத்தப்பட்டது. இது கதிர்வீச்சு தாக்குதலுக்குள்ளாகி விரிசலடைய காரணமாகியது.
3. 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நரோரா அணுமின் நிலையத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய தீவிபத்து ஒன்றால் உலை உருகும் நிலைக்கு சென்றது.
4. 1985 ல் ராஜஸ்தானில் உள்ள 2 வது உலையிலுள்ள கம்பிவட இணைப்பு அதிகச் சூடானதால் தீப்பிடித்து மொத்த கம்பிவட தட்டிலும் பரவி 8 ல் 4 PHT குழாய்களை நிர்மூலமாக்கிவிட்டது.
5. 1991 ல் கக்ராபூர் அணுஉலை 1 ல் உள்ள சுவிட்ச்கியர் அறையில் ஏற்பட்ட தீவிபத்தால் அவசரகால டீசல் மின்சக்தியும் நேர் மின்னோட்ட சக்தியும் முழுமையாக செயலிழந்தது.
6. 1993 மார்ச்சில் நரோரா அணுமின் நிலையத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
7. மே 13, 1994 ல் கைகா அணுஉலையின் கடைசி கட்டட கட்டுமான பணிகளின் போது முன் அழுத்தப்பட்ட வன்காரை கன்டெய்ன்மென்ட் டூம் உடைந்து விழுந்ததால் கைகா அணுஉலைத்திட்டம் சிறிது காலம் நிறுத்திவைக்கப்பட்டது

இது போன்று பல நிகழ்வுகளிலிருந்தும் இந்தியா எந்தவொரு பாடமும் கற்றுக்கொண்டதாக தெரியவில்லை. மாறாக மேலும் மேலும் புதிய அணுஉலைகளை நிர்மானிக்க அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளோடு ஒப்பந்தங்கள் போட்டு வருகின்றது.

உலக நாடுகளின் நிலைப்பாடு ::

அமெரிக்கா 1973 க்கு பிறகும் கனடா 1978 க்கு பிறகும் புதிய அணுஉலை எதையும் நிறுவவில்லை. புகுசிமா விபத்திற்கு பிறகு அணுஉலைகளை பெரிதும் நம்பியிருந்த ஜெர்மனி, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகள் தங்களின் அனைத்து உலைகளையும் மூடிவிடுவதென முடிவு செய்துள்ளன. ஆனால் இந்திய ஆட்சியாளர்களும், விஞ்ஞானிகளும் இவைகளை எல்லாம் மறைத்து இவை மிகவும் பாதுகாப்பானது என பொய்யுரைத்து வருகின்றனர். உலகமயமாக்கல் என்ற பெயரில் பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு வழி திறந்தவிட்டவர்கள் இன்று அவர்களின் 150 பில்லியன் டாலர் தொழில் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக இந்த அணுஉலைகளை நம்மீது திணித்துக் கொண்டிருக்கின்றது.

நமது பணி ::

கூடங்குளம் அணுஉலையை எதிர்ப்பதின் கட்டாயம் உணர்ந்து கூடங்குளம், இடிந்தகரை மற்றும் அதை சுற்றியுற்ற மக்கள் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க போராட்டத்தை நடத்தி வருகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்வாதாரங்களை பாதுகாக்கவும் தங்கள் சந்ததியினரின் நல்வாழ்வுக்காகவும் உயிர்ப்போடும் துடிப்போடும் வெல்லும் லட்சியத்தோடும் போராடி வருகின்றனர். அந்த மக்கள் அவர்களுக்காக மட்டுமல்ல நம் எல்லோருக்காகவும், இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்களுக்காகவும் போராடி வருகின்றனர். இந்த போராட்டத்திற்கு நமது ஆதரவை வழங்கி அதை மாபெரும் வெற்றிபெறச் செய்ய வேண்டியது ஒவ்வொரு தமிழரின் வரலாற்றுக் கடமையாகும்.

ச. பாலாஜி, மே 17 இயக்கம், பெங்களூர்