எரியும் மத்திய கிழக்கும் வடஆபிரிக்காவும்
சேனன்-
-புரட்சியும் -மார்க்சியரும்-
05-02-2011 அன்று “விக்கஸ், மார்க்சியர் மற்றும் எகிப்திய விளைவு” என்ற தலைப்பில் உலகின் முன்னணி வலதுசாரியப் பத்திரிகையான பினான்சியல் டைம்ஸில் (Financial Times) எட்வர்ட் கடாஸ் (Edward Hadas) என்பவர் ஒரு சிறு கட்டுரை எழுதியிருந்தார். ஒரு சதத்துக்கும் உதவாத அக்கட்டுரை வலதுசாரிய சிந்தனைப்போக்கின் -அதாவது அதிகார மையத்தின் பார்வையில் -ஏற்பட்டுவரும் மாற்றங்கள் பற்றிய எடுத்துக் காட்டுக்கு ஒரு சிறு உதாரணம். இக்கட்டுரை சமூகத்தைப் புரிந்து கொள்ள அவர்கள் எதிர்கொள்ளும் குழப்பத்தை மிக்க குழப்பத்துடன் முன்வைக்கிறது. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொள்ள இருக்கும் வழிகளில் மார்க்சியம் மிக முக்கியமான வழிமுறைகளை முன்வைக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளும் இக்கட்டுரையாசிரியர் தனக்கு விருப்பமான முறையாக ஒரு முறையை முன்வைக்கிறார். ‘திறந்த பொருளாதாரம் வளரலாம் அல்லது வளராமலும் விடலாம்- அதை அங்கு சம்மந்தப்பட்ட நாட்டுக்குள் போய்த்தான் பார்க்கவேண்டும்’ என்ற அடிப்படையில் அவர் ‘முறை’ விரிகிறது. திறந்த பொருளாதாரத்தை முன்வைத்து அதன் வளர்ச்சியை ஒட்டி வரலாற்றைப் புரிந்து கொண்டு-அது சார்ந்து வரலாற்றை இயக்க வேண்டும் என்ற அடிப்படை நோக்கில் அவர் வாதம் விரிவடைவதை ஊகித்துக்கொள்வது சிரமமல்ல- அதாவது அதிகாரத்தின் பொருளாதார நலனுக்காக தாம் எதுவும் செய்யலாம் என்பதைச் சாரம்சமாகக் கொண்டதாக அவரது ‘முறை’ சுருங்குகிறது. சமகால வரலாற்று நிகழ்வுகளை விளக்க இவர்களிடம் எந்த ‘முறை’களும் இல்லை என்பதைச் சொல்லி அதற்காக மார்க்சியத்தைத் துணைக்கழைத்து, பின் அதைத் திட்டித் தீர்க்கும் இவர்களது போக்கு மிக வேடிக்கையானது. ஒடுக்கப்பட்ட மக்களின் எதிரிகள் கூட இன்று போராட்டத்தின் தத்துவமான மார்க்சியத்தைப் பற்றிப் பரவலாகப் பேசத் தொடங்கியிருப்பது நாம் ஒரு புதிய போராட்ட சகாப்தத்தில் நுழைந்திருப்பதை மீண்டும் சுட்டி நிற்கிறது.